நீதி:திருமலையிலும் யாழிலும் சமநேரத்தில் போராட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியுள்ளன.
திருகோணமலையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள்; கலந்து கொண்டதுடன் பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற போராட்டத்தில் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்திருந்தனர்
இலங்கை காவல்துறையினர் பலத்த முயற்சி எடுத்தனர். அப்போது அங்கே ஏற்பட்ட குழப்ப நிலையில் செயற்பாட்டளரான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்;.
எனினும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக திருகோணமலை கடற்கரையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் பின்னர் இளைஞர் விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை வடக்கிற்கான பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையில் தீச்சட்டிகளை ஏந்தியபடி பேரணியில் பங்கெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதி ஊடாக பயணித்து கோட்டை முனியப்பர் கோவிலடியை அடைந்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பேரணி இடம்பெற்றிருந்தது.