November 23, 2024

வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் – அனைத்து தரப்பின் ஆதரவையும் கோரி நிற்கும் தாய்மார்

பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 இது தொடர்பிலான விசேட ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது. 

அந்த ஊடக அறிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம். 2700 நாட்களை கடந்தும் கடந்த 15 ஆண்டுகளாகவும் தெருவில் நின்று எம் பிள்ளைகளின் விடுதலைக்கும் நீதிக்குமாக தொடரும் போராட்டத்தை ஸ்ரீலங்கா அரசினால் ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது பன்னாட்டு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதையும் நாம் மீண்டும் ஸ்ரீலங்கா அரசுக்கு நினைவுபடுத்துகின்றோம். 

 ஆகஸ்ட் 30ஆம் நாள் பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும் அன்றைய நாளில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடாத்த இருக்கின்றோம். 

அது தொடர்பான தெளிவுபடுத்தலாக இந்த அறிக்கையை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். 

 உலகமெங்கும் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு ஆயுதமாகவே கையாளப்படுவதாக ஐ.நா கூறுகின்றது. அதாவது ஜனநாயகத்திற்கு எதிரான மனித உரிமைகளுக்கு எதிரான இனங்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பிரயோகிக்கப்படுகின்றது. 

அந்த வகையில் உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. சில நாடுகளில் அதன் ஜனநாயத்திற்கு எதிரான – மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக செயற்படுகின்ற நபர்கள் குடும்பம் குடும்பமாகவும் தனி உறுப்பினர்களாகவும் காணாமல் ஆக்கப்படுகின்றனர். 

அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்களை தொகுத்துக்கொள்ளுவதற்கு அந்த நாடுகள் திட்டமிட்ட அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கமாமல் புள்ளி விபரங்களை மறைத்து வருவதாகவும் ஐ.நா கூறுகிறது. போர், பஞ்சம், வன்முறை போன்ற சூழலில் காணாமல் ஆக்கப்படுதல்கள் சமூக அவலத்தை ஏற்படுத்தியுள்ளன. 

முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் தொடங்கிய காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலக அளவில் பரந்து விரிந்து செல்கிறது. அந்த வகையில் அர்ஜன்டீனா, ஸ்ரீலங்கா, வியட்னாம், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற பல நாடுகளில் இனங்களுக்கும் சமூகங்களுக்கும் எதிரான ஆயுதமாக கையாளப்படுகின்றது. 

போரில் கொல்லப்பபடுவதை விடவும் ஒரு இனத்திற்கு நீண்ட துயரத்தையும் நீண்ட அழிவையும் நீண்ட மனச் சிதைவுகளையும் ஏற்படுத்தவே காணாமல் ஆக்கப்படுதல் என்பது கொடூரமான ஆயுதமாக பிரயோகிக்கப்படுகிறது ஈழத்தைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது முள்ளிவாய்க்காலிலோ, அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலோ தொடங்கிய நிகழ்வல்ல. 

ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரி போராடத் துவங்கிய காலத்தில் இருந்தே வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இன ஒடுக்குமுறையின் ஒரு ஆயுதமாக கையாளப்பட்டு வந்துள்ளது. 

1996ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, 1980- 96 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11,513 பேர் காணாமல் போயிருப்பதாகவும்; 1996-ஆம் ஆண்டு ஆசிய மனித உரிமை ஆணையத்தின்‘ அறிக்கைப்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 16,742 என்றும் கூறப்பட்டுள்ளது. 

எனினும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்பதை

 இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

 இதற்குப் பிந்தைய காலத்தில் கோத்தபாய ராஜபக்சவின் வெள்ளைவான் கடத்தல் வாயிலாக மாத்திரம் வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் வசித்த பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய காலத்தில்கூட தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்கவும் ஆயுதப் போராட்டத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தவும் இளைஞர் சக்தியை இல்லாமல் செய்யவும் ஈழத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுதல் என்பது கட்டமைக்கப்பட்ட ரீதியில் ஸ்ரீலங்கா அரசின் இயந்திர நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் போது சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரளவில் இறுதிப்போரில் இனவழிப்பு செய்யப்பட்டவர்களாக கருதப்படுகின்றது. இப்போரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதைப் போன்றே இன்னொரு உபாயமாக காணாமல் ஆக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் போதும் இறுதியாக முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்பும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சரணடைந்தவர்கள் இறந்துவிட்டார் என்றும் சரணடைந்தவர்கள் இப்போது இல்லை என்றும் மழுப்பல் பதில் கூறுகின்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களை என்ன செய்தது என்பதை இந்த உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்? அவர்கள் எப்படி வலிந்து இல்லாமல் செய்யப்பட்டார்கள் என்றும் இவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் சிங்கள அரசு அறிவிக்க வேண்டும். கொன்றழிக்கப்பட்ட நிலையில் ஈழ இறுதிப் போரில் 59 மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

பல நூற்றுக் கணக்கான குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் 21ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுடன் 59 மேற்பட்ட குழந்தைகள் சரணடைந்துள்ளனர். 

இவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டும் என்றே ஈழத் தமிழ் இனம் போராடுகிறது. 59 மேற்பட்ட குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்குவதன் வாயிலாக உலகில் குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்குவதில் முதல் தர நாடு என்ற பெருமையை சிங்கள தேசம் பெற்றுள்ளது. 

குழந்தைகளின் உரிமை தொடர்பிலும் இனவழிப்பு தொடர்பிலும் வரைவிலக்கணங்களை கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையும் இன்ன பிற நிறுவனங்களும் சிங்கள இனவழிப்பு அரசை மயிலிறகால் தடவுவதே உலக மக்களுக்கு வேதனை தருகின்ற விடயமாகும். 

இந்த நிலையில் ஈழ மண்ணில் ஸ்ரீலங்கா அரசினால் இனவழிப்பு நோக்கத்திற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் விடுதலை மற்றும் நீதியை வலியுறுத்தி பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு அன்பாக வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert