இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது!
1983
இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது!
1983 யூலையில் சிங்களப் பேரினவாதம் நடாத்திய குரூரவெறியாட்டம் தான் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை. இந்த இனவெறியாட்டம் நன்கு திட்டமிடப்பட்டே அன்றைய nஐயவர்த்தனா அரசால் நடத்தப்பட்டது என்பதை உலகம் நன்கறியும். இலங்கை அரசின் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நாளுக்கு நாள் இறுக்கமடையத் தொடங்கிய வேளையில், போராளிகளின் தாக்குதல் திட்டங்களும் வலிமை பெற்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தமிழ் இளையோர்கள் மீதான இந்த ஒடுக்குமுறைகளை அன்றைய இலங்கை அரசு முடுக்கிவிட்டபோது, விடுதலைப் புலிப்போராளிகளும் தமது படை நடைவடிக்கைகளை அதிகரிக்கத் தொடங்கினர் என்பதே உண்மையாகும்.
அதனால் ஆத்திரமுற்றிருந்த இலங்கை அரசுத்தலைமை தமிழ்ப் போராளிகளையும், அவர்களை ஆதரிக்கும் தமிழர்களையும் பழிதீர்த்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது.
யாழ். திருநெல்வேலியில் இலங்கைப்படையினர் 13 பேர் தமிழ்ப்போராளிகளின் நிலக்கண்ணிவெடியில் சிக்கி உயரிழந்தனர். சுற்றிவளைப்பு செய்து தமிழ்மக்களைக் கைதுசெய்வதிலும், மக்களைத்துன்புறுத்துவதிலும், யாருமறியாமற் படுகொலை செய்து வீசுவதிலும் ஈடுபட்ட படையினர் மீதே போராளிகளின் தாக்குதல் 1983 யூலை 23 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே தமிழர்களைப் பழிதீர்த்து, அச்சமூட்ட திட்டமிட்ட இலங்கை அரசு இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை வைத்து தமது இனவாத அரசியல் நாடகத்தை தென்னிலங்கையில் நிறைவேற்றிக் கொண்டது. இதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தவர் அன்றைய ஐனாதிபதியாக இருந்த nஐயவர்த்தனா. அன்றைய சிங்கள ஊடகங்கள் சிலவும் எரியும் இனவாதத் தீக்கு ஊதிமூட்டி எண்ணை ஊற்றின.
முன்னதாக 1983 யூலை 15 இல்தான் திருகோணமலையை பிறப்பிடமாகவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியுமான சீலன், காட்டிக்கொடுக்கப்பட்டு, சுற்றிவளைப்பின்போது விழுப்புண்ணுற்று, தப்பிக்க முடியாத நிலையில் சக வீரன் ஒருவருக்கு கட்டளையிட்டு, தன் சாவை அணைத்துக் கொண்ட துயரநிகழ்வும் நடந்திருந்தது.
இந்நிலையில் கடுஞ்சினமுற்றிருந்த அமைப்பின் தலைமை திட்டமிட்ட தாக்குதலாகவே 1983 யூலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
1970 இல் உலகத்தமிழாராட்சி மாநாடு நடைபெற்றவேளை, இறுதிநாளான ஐனவரி 10 இல் தமிழர்கள் துடிதுடித்து இறந்தபோது சிங்களப்பேரினவாதம் அமைதியாய் இருந்தது. 1981 யூன் 1 இல் தமிழர்களின் பெருஞ்சொத்தான யாழ்ப்பாணப் பொதுநூலகம் பேரினவாதப் பேய்களால் எரியூட்ப்பட்டபோதும், தமிழர்களின் சொத்துகள் எரியூட்டப்பட்ட போதும், தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும் அமைதியாய் வேடிக்கை பார்த்துநின்றது சிஙகளப் பேரினவாதம். பார்த்துநின்றது மட்டுமன்றி உற்சாகப்படுத்தியது.
ஆனால் 13 படையினர் கொல்லப்பட்டதும் பொங்கி எழுந்து கூத்தாடிற்று. சிங்களமக்களிடம் இனவாதத்தை தூவி அவர்களை உசுப்பேற்றியது. அதன் விளைவாகத்தான் தமிழினத்தின்மீது பெரும் இனப்படுகொலை ஏவிவிடப்பட்டது.
சிங்களப்பகுதிகளில் தொழில்நிமித்தம் வாழ்ந்துவந்த தமிழ்மக்கள் மீது இனவாதத்தின் கோரப்பற்கள் பதிந்தன. தமிழ்மக்களின் வீடுகள், உடைமைகள் மட்டுமன்றி உயிர்களும் எரிந்தன. பலநூறுகோடி ரூபாய் பெறுமதிமிக்க உடைமைகள் தீக்கிரையாயின. தேடித் தேடி தமிழர்கள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.
தமிழர்களை கைது செய்து விசாரணைகளின்றி சிறையில் அடைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைதுசெய்யபப்பட்டு, வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை உடனிருந்த சிங்களக்கைதிகளே அடித்துக் கொன்றார்கள். யூலை 25 ஆம் நாளன்று 35 தமிழர்களும், யூலை 27 ஆம் நாளன்று 17 தமிழர்களும் இவ்வாறு சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் இன எழுச்சிமிகு இளைஞர்களாகவும், ரெலோ இயக்கபோராளிகளுமான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் கண்கள் கூரிய ஆயுதங்களால் தோண்டப்பட்டு, சிறைச்சாலை வளவுக்குள் இருந்த புத்தபிரானுக்குப் படையலிடப்பட்டன. முன்னதாக இவர்கள், மலரப்போகும் தமிழீழத்தை தமது கண்களாற் பார்க்கவேண்டும் என்று தெரிவித்திருந்ததை அடுத்து, அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டன.
தென்னிலங்கையின் தெருக்களில் தமிழ்மக்கள் அச்சத்தோடு அவலப்பட்டு ஓடித்திரிந்தனர். அகதிகளாகத் தஞ்சமடைந்த தமிழ்மக்கள்கூட இழுத்துவரப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
இலங்கை ஒன்றித்த நாடு எனக்கூறும் அரசின் காவலர்களோ, படையினரோ தமிழ்மக்களின் அவலங்களைக் கண்டுகொள்ளவில்லை. தமிழர்கள் ரயர்போட்டு எரிக்கப்படுவதை அவர்களும் பார்த்துக்கொண்டு நின்றனர் என்கிறது வரலாறு. ஓர் இலட்சம் வரையான தமிழர்கள் அப்போதைய தாக்குதல்களில் வீடிழந்து அகதிகளாயினர்.
‚ தமிழ்மக்களின் பாதுகாப்பிற்கு தாம் ஒருபோதும் பொறுப்பாக முடியாது ‚ என அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா அறிவித்தபோது, தமிழ்மக்கள் மட்டுமல்ல மொத்த உலகமுமே திகைத்துப்போனது. அதுமட்டுமன்றி சிங்கள மக்களின் இந்த இனவாத வெறித்தனம் இயல்பானது தான் என தொலைக்காட்சியிலும் தெரிவித்தார்.
யூலை 24 ஆம் நாளன்று யாழ்ப்பாணத்தில் கந்தர்மடத்திலும், திருநெல்வேலியிலும் சிங்களபப் படையினர் நடத்திய வெறியாட்டத்தில் 51 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள் எனப்பலரும் உள்ளடங்கினர்.
1983 இல் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை தான் பெருமளவு தமிழ் இளைஞர்களை போராடுவதற்கு உந்தித்தள்ளியது. இவ்வாறு உருவான போராட்டம் தான் நிலமீட்புப் போராட்டமாக வலிமையடைந்தது. தாய்த்தமிழ் தேசத்தின் விடுதலைக்கான எழுச்சியாக வடிவெடுத்தது. எண்ணற்ற ஈகங்களும், உயிர்விதைப்புகளுமாக வளர்ச்சியடைந்தது. எண்ணற்ற துயரங்களைச் சுமந்திருந்தாலும் தாய்மண்ணின் விடுதலை என்னும் உயிர்ப்பை ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உருவாக்கி வைத்திருக்கின்றது.
இன்று விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், தமிழர்களின் நெஞ்சங்களில் இது தீராத விடுதலை விடாயாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் கண்ணீருக்கும் செந்நீருக்கும் அர்த்தம் உணரப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது என்பதே உலகம் உணரக்கூடிய செய்தியாக வியாபித்து நிற்கிறது.