மீண்டும் யாழ் வரும் வைத்தியர் அர்ச்சுனா : நல்லூரில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்
குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியசாலை நிர்வாகிகளை உடனடியாக மாற்றம் செய்து சுகாதார அமைச்சு (Ministry Of Health) புதன்கிழமைக்குள் ஒரு மாற்றத்தை செய்யாவிடில் நாங்கள் மீண்டும் நல்லூரில் சந்திப்போம் என வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “நான் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அனைத்து வைத்தியர்களை நோக்கியும் கை நீட்டாதீர்கள்.
பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் வைத்தியர்கள் பிழை விட்டிருக்கலாம். ஆனால் ஒரு போதும் வைத்தியக் கடமையில் அவர்கள் பிறழ்வதில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.
என்னுடைய பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் புதன்கிழமை வரைக்கும் நான் பொறுமையாக பார்ப்பேன்.
புதன் இரவு நான் யாழ்ப்பணத்திற்கு (Jaffna) வருவேன், வியாழக்கிழமை காலை நாங்கள் மீண்டும் நல்லூரில் சந்திப்போம். அதன்பிறகு மக்கள் போராட்டமாக இது மாறும். இதில் என்னை நான் ஆகுதி ஆக்குவதற்கும் தயாராக உள்ளேன். இது ஒரு வரலாறாக அமையும்.
ஊழல்களைப் பார்ப்பதற்கு ஓரளவு பொறுமை தான் இருக்கின்றது. பிரச்சினைகள் கூடிக்கொண்டே போகின்றது. குற்றவாளிகள் இப்பொழுதும் கதிரைகளில் இருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.