தலைவரிடமே சிந்தனையிருந்தது!
ஒரு தேசிய இனத்தை மற்றைய தேசிய இனங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டும் விடயங்களில் அதன் பண்பாடும் ஒன்று. அது வெறும் அடையாளம் அல்ல. ஒரு இனத்தின் தேசியத்தைக் கட்டமைப்பதில் அந்த இனத்தின் வாழ்புலம், பேசுகின்ற மொழி எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்குப் பண்பாடும் இன்றியமையாதது. ஆனால், தமிழ்தேசியக் கட்சிகள் வாழ்புலத்துக்கும் மொழிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பண்பாட்டுக்குக் கொடுப்பதில்லை. பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த்தேசிய அரசியல் வலுப்பெறாது என்பதை எமது தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன்..
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலின் காலத்தை தலைமைத்துவ அடிப்படையில் ஜி.ஜி பொன்னம்பலம் காலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலம், அமர்தலிங்கம் காலம், பிரபாகரன் காலமென்று ஆய்வாளர்கள் பிரித்து வைத்திருக்கின்றனர். இவர்களில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்துவதில் கலை, இலக்கியங்களினதும் பண்பாட்டினதும் வகிபாகம் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். கலை, பண்பாட்டுக்கழகம் என்று தனியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு போராளிகளின் பாசறைகளில் மாத்திரமல்லாது பொதுமக்களிடையேயும் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயற்பாடுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
தமிழ்ப்பண்பாடு இன்று மும்முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. ஒரு புறம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் உலகமயமாக்கலினால் அதன் தனித்துவத்தை இழந்து கொண்டிருக்கிறது. மறுபுறம், எமது அக்கறையின்மையாலும் தொன்று தொட்டு நாம் கடைப்பிடித்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களில் பண்பாடும் ஒன்று என்பதை உணர்ந்து மக்களிடையே பண்பாட்டுச் செயற்பாடுகளை ஒரு பேரியக்கமாக முன்னெடுப்பதற்கு எமது தலைவர்கள் முன்வரவேண்டுமெனவும் பொ.ஜங்கரநேசன் அழைப்புவிடுத்துள்ளார்