November 21, 2024

ஓற்றுமைக்கு குரல் கொடுக்கும் சித்தர்!

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிப்பதாக  நடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

போராட்டம் என்ன காரணத்துக்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதம் எடுத்தும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் இன்றும் இம்மியளவும் மாறாது அப்படியே இருக்கின்றது.

மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என அது நீண்டு செல்கின்றது. அண்மைக்காலமாக இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்குத் தமிழ் மக்கள் அதிகளவில் செல்கின்றார்கள்.

15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இந்த நிலை தொடர்கின்றது. இந்தநிலை தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்துக்கும் கொண்டு செல்லும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் வெளிநாடு செல்வது சரி.

அது அவர்களுடைய விருப்பம். ஆனாலும், ஒரு இனமாகப் பார்க்கின்றபோது மிகவும் பின்னடைவு. ஆனாலும், வெளிநாடுகளில் உள்ள எங்களது உறவுகள் எங்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பலமாக இருக்கின்றார்கள்.

போச்சுவார்த்தை என்று வருகின்றபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் எனச் சொல்கின்றார். அவர்களிடம் இருக்கக் கூடிய அந்தப் பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் என ஜனாதிபதி சிந்திக்கின்றார்.

அது பற்றி எம்முடன் அவர் கதைக்கின்றார். ஆனாலும், தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசும் தமிழ மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்கத் தயாரில்லை. 

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம். அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம். மக்களில் பலர் அதை விரும்புகின்றார்கள்.

சிலர் விரும்பவில்லை. சிலர் இது ஒரு விசப் பரீட்சையாக இருக்கும் என்கின்றார்கள். சில வேளைகளில் நாம் விரும்பக் கூடிய வாக்குளைப் பெறாவிட்டால் அது பாதிக்கும் என நினைக்கின்றார்கள்.

கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றன, கட்சிகள் ஒற்றுமையாகச் சொல்வதை மக்கள் கேட்கின்றார்கள் என வெளிநாடுகள் நம்பும் நிலை ஏற்படத் தமிழ்ப் பொது வேட்ப்பாளர் அவசியம். இதனூடாக நாங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா கூட தமிழ்ப் பொது வேட்பாளரின் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் கூட அது சரி என்று சொல்லியுள்ளார்.

இப்படியாகத் தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய பலர் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள். இப்படியாக எல்லோருமாக ஒற்றுமையாக வரக் கூடிய ஒரு நிலையில் நாம் எமது பலத்தைக் காட்டக் கூடியதாக இருக்கும்.

ஒற்றுமையைக் காட்டுவதன் மூலம் நாம் உலக நாடுகளிடையே எமது சரியான நிலைப்பாட்டைக் காட்டக் கூடியதாக இருக்கும். அதற்காகவே இந்த முயற்சியைச் செய்கின்றோம்.“ எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert