எனது முழு ஆதரவும் டொனால்டு டிரம்பிற்கு : எலான் மஸ்க்
டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமெரிக்காவின் உளவுத்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் இது தொடர்பாக கூறுகையில், டொனால்டு டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன்.
அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.