November 24, 2024

முப்படை வசம் 3500 ஏக்கர்?

யுத்த முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து 14வருடங்கள் கடந்துள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்தும் 3,571 ஏக்கர் நிலம் முப்படையினரிடம்  உள்ளதென இலங்கை பிரதமர் திணேஸ் குணவர்த்தனவின் கவனத்திற்கு மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் திணேஸ் குணவர்த்தன தலைமையில் இன்று இடம்பெற்ற  யாழ்ப்பாண மாவட்டத்திற்கான  விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில்  2 ஆயிரத்து 624 ஏக்கர் தனியார் காணிகளும், 951 ஏக்கர் அரச காணிகளும் இன்னும் படையினர் வசம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் காணிகளில் இராணுவத்தினரிடம் ஆயிரத்து 775 ஏக்கர் நிலமும், விமானப்படையினரிடம் 660 ஏக்கர் நிலமும், கடற்படையினரிடம் 160.67 ஏக்கர் நிலமும் உள்ளதோடு காவல்துறையிடம் 28 ஏக்கருமாக குடாநாட்டில் 2 ஆயிரத்து 624 ஏக்கர் தனியார் காணிகள் படையினரிடம் உள்ளது.

அதேபோன்று அரச காணிகளில் இராணுவத்தினரிடம் 416.66 ஏக்கர் நிலமும், விமானப்படையினரிடம் 349.82  ஏக்கர் நிலமும், கடற்படையினரிடம் 179.70 ஏக்கர் நிலமும் உள்ளதோடு காவல்துறையிடம் 10.34  ஏக்கருமாக குடாநாட்டில் 951.52  ஏக்கர் அரச காணிகள்  படையினர் வசம் உள்ளது. 

அதற்கமையவே தற்போதும் 3,571 ஏக்கர் நிலம் படையினர் வசம் இருப்பதாக  பிரதமர் திணேஸ் குணவர்த்தனவின் கவனத்திற்கு மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் கொண்டு சென்றிருந்தார்.

இதனிடையே தனது யாழ்ப்பாண பயணத்தின் போது அவர் கிளிநொச்சிக்கும் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert