November 21, 2024

நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் எடுத்தார் குகதாசன்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன்  சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவை அடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கதிரவேலு சண்முகம் குகதாசன்  கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வியைப் பெற்றுள்ளார்.

1975ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழ் அரசு கட்சியில் உறுப்பினராக இருந்து 2018 ஆம் ஆண்டு முதல் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தேசிய கொள்கை, பொருளாதார விவகாரங்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கிழக்கு மாகாண அபிவிருத்தி அலுவல்கள் இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து  போட்டியிட்டிருந்தார்.

இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் நியமனம் குறித்த வர்த்தமானி அறிவிப்பை (2391/ 14) தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert