சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார் வைத்தியர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார்.
வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.
அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.
இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.
வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது.
அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.