November 22, 2024

யாழில் கணவன் இல்லாத மிக ஏழை பெண்ணிடம் பணம் பறித்த பொலிஸ்!!

பொன்னாலை மேற்கில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச்சென்றுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மேற்படி பெண் தலைமைத்துவக் குடும்பம் குடிசை வீடொன்றிலேயே வசித்து வருகின்றது. நீண்ட காலமாக கிணறு இல்லாமல் பொதுக் கிணறுகள் மற்றும் அயல் வீட்டுக் கிணறுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இக்குடும்பத்தில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் கற்றல் நேரத்திற்கு மேலதிகமாக பகுதி நேரமாக தொழிலுக்குச் சென்று சேகரித்த பணத்தில் குழாய்க் கிணறு ஒன்றை அமைக்க முடிவெடுத்தனர்.

இன்று திங்கட்கிழமை மதியம் குழாய்க் கிணறு வெட்டிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த பொலிஸார் அனுமதி பெறாமல் குழாய்க்கிணறு வெட்டுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனக்கூறி அக்குடும்பத்தை அச்சுறுத்தினர்.

கிணறு வெட்டுவதற்காக வந்தவர்களின் கருவிகளைக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்டினர்.

செய்வதறியாது திகைத்து நின்ற மேற்படிக் குடும்பம் அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் தமக்கு தெரியாது எனவும் தமது கஸ்ட நிலையையும் பொலிஸாருக்கு எடுத்துக் கூறினர்.

அவர்களின் கருத்தைச் செவிமடுக்காத பொலிஸார் 10 ஆயிரம் ரூபா பணம் தந்தால் எதுவும் செய்யாமல் விட்டுச் செல்வதாகக் கூறினர். ஆனால் அக்குடும்பமோ கிணறு வெட்டுவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை மாத்திரமே சேகரித்து வைத்திருந்தது.

தம்மிடம் பணம் இல்லை எனவும் அவ்வாறாயின் இரண்டாயிரம் ரூபா தருகின்றோம் எனவும் கெஞ்சிக் கேட்டனர். பொலிஸார் உடன்படவில்லை. ஐயாயிரம் ரூபா தருகின்றோம் என்றனர். அதற்கும் உடன்படாத பொலிஸார் 8 ஆயிரம் ரூபா பணத்தைப் பறித்துக்கொண்டு சென்றனர்.

பொன்னாலையில் பல குழாய்க்கிணறுகள் வெட்டப்பட்டிருக்கின்ற போதிலும் இதுவரை யாரும் அனுமதி பெற்றிருக்கவில்லை. அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மேற்படி குடும்பத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப் போன்று பணத்தைப் பறித்துச் சென்றிருக்கின்றனர்.

நாட்டில் அதுவும் வடக்கில் உள்ள பொலிஸார் இலஞ்ச மழையில் குளிக்கின்றனர் என கடந்த காலங்களில் நாடாளுமன்றில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய போதிலும் பொலிஸ் தலைமையகம் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert