November 23, 2024

யாழ்.போதனாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மது போதையில் வந்த இருவர் யாழ்போதனா வைத்திய சாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினுள் தமது வண்டியை செலுத்தினார்கள். வண்டியின் பின்னால் இருந்தவர் மது போதையில் தனது கையை கண்ணாடிக்குத் தானே இடித்ததனால் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தவர். அவர் அனுமதிக்கும் வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் தானே  சிகிச்சை அலகினுள் பிரவேசித்தார்.  மற்றையவர் விடுதியின் உள்ளே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வைத்தியசாலை ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளை பேசியதோடு அல்லாமல் அங்கிருந்த பிரிண்டரினை தூக்கி ஊழியர் ஒருவரின் மீது வீசி அவரது தலையில் படுகாயத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பாதிக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மதுபோதையில் வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1.உடனடியாக சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதுகாப்பு பொறிமுறையில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

2. கடமையில் உள்ள வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

3 . வைத்தியசாலைக்கு வருகின்ற  அப்பாவி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

4. சம்பந்தப்பட்ட நபர் ஆகக்கூடிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து வைத்தியசாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தொடர் தொழிற்சங்க  போராட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படலாம் – தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share:

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert