பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை
பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் அவர் என்னை வீடு தேடி வந்து சந்தித்தார். அதன் போது அரசியல் ரீதியாக நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
பொருளாதார ரீதியாக வடக்கு மக்களை மேலே ஏற்றி விட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கிறது இளைஞர்கள் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு.
அரசியல் ரீதியான பிரச்சனைகள் பற்றி கதைக்கவில்லை. எல்லாவற்றையும் பொருளாதார ரீதியான பிரச்சனைக்குள் வைத்தே பார்க்கின்றார்.
பொது வேட்பாளர் சம்பந்தமாக பேச்சு எழுந்தது. அதன் போது , தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமைம், தகுதி , பின்னணி இல்லை என ஜனாதிபதி கூறினார்,
நான் சிரித்து விட்டு , எனக்கு அது பற்றி தெரியாது. அதற்கு உரிய குழுக்கள் அது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் பொது வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பார்கள் என கூறினேன்.
சிறுபான்மையினரின் ஆதரவு தனக்கு தேவை என்பதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தல் முடிய பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படும் எனவும் , அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.
எங்களின் வாழ்க்கை தரத்தை மேல் எழுப்பினாலும் , அரசியல் ரீதியான தீர்வுகள் தரவோ எம்மை நாம் வலுப்படுத்தவோ விடமாட்டார்கள் என்பது தெரிகிறது என சி.வி, விக்னேஸ்வரன் தெரிவித்தார்.