நீங்களே எங்களது எல்லைத் தெய்வம்!! விடுதலைப் புலிகளின் தலைவரை நினைந்துருகும் சிங்கள இளைஞன்
இலங்கையில் மூன்று தசாப்த கால உரிமைக் கோரிய யுத்தம், எந்தவொரு ஈவு, இரக்கமுமின்றி முடிவுறுத்தி வைக்கப்பட்டு 15 வருடங்கள்.
இந்த 15 வருடங்களும் யுத்தத்தில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூரவே அரசாங்கத்துடன் பெரும் போர் புரிந்திருக்கின்றது இந்த தமிழினம்.
இப்படி, ஆரம்ப காலத்தில் தமிழினத்தை கொஞ்சம் கொஞ்சமாக வதைக்க தொடங்கிய சிங்களத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்த்து நின்ற விடுதலைப் புலிகளின் தலைவரை புகழவோ, நினைந்துருகவோ விட்டுவிடுவார்களா என்ன இந்த சிங்கத்தின் மைந்தர்கள்.
ஆனாலும், காலம் மிக வலியது. எப்போது ஒருவர் கூடாது, எமக்கு விரோதி என்று நினைத்து அவரை அழிக்க பல நாடுகளை ஒன்றுதிரட்டி சதி செய்தார்களோ அந்த தனி ஒரு நபரின் தேவை இன்று சிங்கள பெரும்பான்மை இனத்திலும் உணரப்படுகின்றது என்பது நிதர்சனம்.
இனத்தின் காவலன்….!!
சமகால இளையோர் மத்தியில் ஆரம்பகால பெரும்பான்மை இன மனப்பாங்கு ஆங்காங்கே மறுதலிக்கப்பட்டு வருகின்றது என்பதை கண்கூடாக காண முடிகின்றது. ஆனாலும், அடிப்படையை மாற்ற முடியாது என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருக்கின்றனர் என்பதும் வேதனைதான்.
அரசாங்கத்திற்கு எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போதும், கடந்த காலங்களில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போதும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகளின் தலைவரை நினைவுகூர்ந்ததும், அவரின் தேவையை தாங்கள் உணர்வதையும் வாய்விட்டு வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், ஒரு பெரும்பான்மை இன இளைஞன் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் எக்ஸ் தளத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால்.
எனவே, நீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது” என குறிப்பிட்டுள்ளார்.
காலம் அனைத்தையும் மாற்றும் என்பதையும், ஒரு நாட்டின் குடிகளின் நலனே தன்னுடைய நலன் என்றும் தன்னை அர்ப்பணித்த தலைவனின் புகழ் காலம் தாண்டியும் போற்றப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.