November 21, 2024

டென்மார்கில் எழுச்சியுடன் ஓலித்த நீதிக்கான குரல்கள்.

(18.05.2024 சனி) டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தங்கள் தாயகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட உச்சமான தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு மற்றும் பேரணியும் முன்னெடுத்தனர். கவனயீர்ப்பானது கடந்த 15.05.2024 அன்று தொடக்கம் டென்மார்க் தலைநகரில் நகரசபை மற்றும் Kongens Nytorv சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இக் கவனயீர்ப்பு தாயகத்தில் எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாதைகள், விவரணப் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வளங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற பேரணியானது Sankt Annaes Plads சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள், அங்கிருந்து கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை நோக்கி எழுச்சிக் கோசங்களுடன் பதாதைகளை உணர்வுகளோடு கையேந்தி மாபெரும் பேரணியாக புறப்பட்டனர்.

இனப்படுகொலையின் 15ஆம் ஆண்டில் நீதி கேட்டு பேரணி பெரும் எழுச்சியுடன்,
பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இப்பேரணியில் பதாகைகள், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி, உரத்த குரலிலான ஆர்ப்பரிப்புடன் நகர வீதிகள் ஊடாக இப்பேரணி கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை வந்தடைந்தது. அதன்பின்பு அங்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமாக சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் மலர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்பு இப் பேரணியில் பங்குகொண்ட டென்மார்க் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இளையோர் மற்றும் செயற்ப்பாட்டாளர்களின் எழுச்சியுரைகள் இடம்பெற்றது. குறிப்பாக இளையோர்களது செயற்பாடுகள் மற்றும் அவர்களது எழுச்சியுரைகளும் மிகவும் காத்திரமாக அமையப் பெற்றிருந்தது. இறுதியாக தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று கோசம் உரக்க ஒலித்ததுடன், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் பட்ட வேதனைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்குடன் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” அனைவருக்கும் பரிமாறப்பட்டது குறிப்பிடதக்க நிகழ்வாக இடம் பெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert