கை கோர்த்த முஸ்லீம் உறவுகள்!
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை இன்று வியாழக்கிழமை விலக்கிக்கொண்டுள்ளது.இதனிடையே தமிழ் சட்டத்தரணிகளுடன் பத்திற்கும் அதிகமான முஸ்லீம் சட்டத்தரணிகள் இணைந்து நினைவேந்தல் உரிமைக்காக போராடியமை கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமலை சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டிருந்தவர்களின் வழக்கு புதன்கிழமை (15) விசேட நகர்த்தல் பத்திரம் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனிடையே விசேட நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவிக்கையில், “ எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய எனது வாதத்தை அடுத்து மூதூர் நீதிபதி தஸ்னீம் பௌசான் பானு தடை நீக்கல் தொடர்பான உத்தரவை விடுத்திருந்தார்.
சென்ற12 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கியமை மூலம் நீதிமன்ற தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் 13 ந் திகதி மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 27 திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் செல்லமுடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை எம்.ஏ.சுமந்திரன் நடத்திவருவதாக ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.