November 23, 2024

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 57 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வுக்கு முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 3700 வரையிலான மாணவர்கள் தோற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயபாடத் தேர்வுகளும் நடைபெற்றன. பத்தாம் வகுப்புத்தேர்வில் 365 மாணவர்களும் பதினோராம் வகுப்புத்தேர்வில் 250 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 256 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.

வாழிடக்கல்வியில் பல மொழிகளுடன், தம் தாய்மொழியையும் விருப்புடன் கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரையும் போற்றுகிறோம். தாய்மொழியின் பெயரிலேயே ஒரு இனம் அடையாளப்படுத்தப்படுகிறது. தாய்மொழியைப் பேணாத இனம் பிற இனங்களுடன் கலந்து, கரைந்து அழிந்துவிடும். தம் தாய்மொழியை இடைவிடாது கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகள் தன்னம்பிக்கையுடனும் பண்புடனும் தமிழர் எனும் பெருமையுடனும் வாழ்வதுடன் அடுத்துவரும் பரம்பரையினருக்கும் தமது தாய்மொழி, பண்பாடு, வரலாறு, கலைகளைக் கடத்திச் செல்வார்கள் என நம்பிக்கைகொள்கிறோம்.

இப்பொதுத்தேர்வானது 2022 ஆம் ஆண்டுமுதல் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பெறும் அனைத்துலகப் பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக நடாத்தப்பெறுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் தமிழ்க் கல்விச்சேவையின் தேர்வுக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், இளையோர்கள் ஆகியோர் பல நாட்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றியைத் தெரிவிக்கிறது.

  • Share:

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert