November 22, 2024

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சடலமானது இந்து முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டதாக இருக்கலாம் என தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர். 

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள்  அண்மையில் வெளிவந்தன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது , புதைகுழியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சடலத்துடன் அரிசித்துகள்கள் , துணி . செப்பு நாணயங்கள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன. 

அரிசி துகள்கள், துணி மற்றும் செப்பு நாணயங்கள்  என்பன சடலத்துடன் மீட்கப்பட்டமையால் , உயிரிழந்தவரின் உடலத்திற்கு வாய்க்கரிசி போடப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அதேவேளை எலும்புக்கூடு புதையுண்டு இருந்த நிலையை பார்க்கும் போது, உரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமையால் இது நல்லடக்கம் செய்யப்பட்ட சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொகுதி , அவற்றுடன் மீட்கப்பட்ட  சான்று பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட நீதவான் அது தொடர்பில் பகுப்பாய்வு பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.

அத்துடன் அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. 

சடலம் மீட்கப்பட்ட பகுதியை அண்மித்த பகுதிகளில் கிடங்குகள் வெட்டி , கட்டட வேலைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் , மீட்கப்பட்ட சடலத்தின் பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றுக்கு கிடைத்த பின்னர் , நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்குமாறும் ஏனைய பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்க தடையேதும் இல்லை என ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert