தையிட்டி காணியை கையகப்படுத்த உத்தரவு
வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு ஒருமாத கால அவகாசத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகரவை தலைமையாகக் கொண்ட மேற்படி குழுவின் செயலாளர் சூலா ஹேரத் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலிகாமம் வடக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிப் பிரச்சினை தொடர்பில் 05-03-2024அன்று சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் பாராளுமன்ற குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த காணிப் பிரச்சினையானது இன முரண்பாடுகளை மையப்படுத்தி வேரூன்றி இருப்பதாலும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாலும் ஆழமாக ஆராயப்பட்டது.
அதனடிப்படையில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ள காணிகள் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள காணிகளின் பதிவுகள் அனைத்தும் 2017ஆம் ஆண்டே மேற்கொள்ளப்பட்டள்ளதோடு விகாரை அமைந்துள்ள காணியானது ஐந்து பகுதிகளாக பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது பாராளுமன்ற மனுக்கள் பற்றிய குழுவின் பரிந்துரையின் மூலம் தெரியவந்துள்ளது.
அக்குழுவின் இராணுவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் பிரகாரம், 8.98 ஏக்கர் பகுதியானது விகாரை கொண்டிருப்பது பட்டய நில அளவையாளர்களால் அளவீடு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் 1956ஆம் ஆண்டு வரைபடத்துக்கு அமைவாகவும், 1971ஆம் ஆண்டு நகரத்திட்டமிடல் வரைபடத்துக்கு அமைவாகவும் குறித்த விகாரை அமைந்துள்ள பகுதியில் உண்மையில் மேலதிகமான நிலங்கள் உள்ளதா என்பதை கருத்தில் கொள்வது பொருத்தமானது.
அதனடிப்படையில், விகாரையைச் சுற்றியுள்ள காணிகளையும், விகாரை அமைந்துள்ள எல்லைக்குள் உள்ள காணிகளையும் அளவீடு செய்து விகாரை உள்ள பகுதியில் தனியார் காணிகள் காணப்படுமாயின் அதற்குப் பதிலாக அருகாமையில் உள்ள வேறு பொருத்தமானி காணிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், திஸ்ஸ ரஜமகா விகாரைக்குச் சொந்தமான காணிணை முன்னுரிமை அடிப்படையில் விகாரைக்கு வழங்குவதோடு அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக அடுத்த ஒருமாத காலத்துக்குள் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகின்றது என்றுள்ளது.