November 21, 2024

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு இன்று பிற்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. 

பீடாதிபதி தெரிவுக்காக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், கணக்கியல் துறை சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி, விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கு. வேலாயுதமூர்த்தி மற்றும் விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் க. கஜபதி ஆகியோர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 

பீடாதிபதி தெரிவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியவர்களின் சுய சமர்ப்பணம் இடம்பெற்றது. இதன்போது இரண்டு பேராசிரியர்களே சுய சமர்ப்பணத்துக்கு வருகை தந்திருந்தனர்.  அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாக்களிப்பின் போது சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதனிலை பெற்று உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்குப் பீடாதிபதியாகச் செயற்படுவார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert