November 21, 2024

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்போம். 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும்.ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். 

எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். 

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்  என தெரிவித்தார் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert