ரஷ்யாவில் கூலிப்படையினராக செயற்படும் சிங்கள இராணுவத்தினர்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற பேரினவாத சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடினமான பயணத்தின் பின்னர் நாடு திரும்பிய ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உதவியாளர்கள் என்ற போர்வையில் ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்கள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பின்னர் கூலிப்படைகளாக போர் களத்திற்கு அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூலிப்படைகளாக செயற்படுபவர்கள் ரஷ்ய இராணுவத்தின் காவலில் இருந்து திரும்பி வரமுடியாது.
இந்த முன்வரிசையில் பணிபுரிய நியமிக்கப்பட்டவர்கள் திரும்பி வந்தாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ ரஷ்ய இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
உயிரை பணயம் வைத்து ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இலங்கை தூதரகத்தின் ஊடாக மீண்டும் இலங்கை திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த நபர், ரஷ்ய மொழியில் உள்ள ஆவணங்களைக் காட்டி, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் முகவர்கள் குறித்த ஏராளமான தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கொடுத்துள்ளார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.