நான்கில் ஒருவருக்கு உணவில்லை!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் வாடுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி ஏப்ரல் மாத முதல் பகுதியில் வெளியிட்ட அறிக்கையிலே புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏழை மக்களின் தொகை 11 வீதமாக காணப்பட்ட நிலையில், இந்த தொகையானது தற்போது 26 வீதமாக அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், வருமான இழப்பு மற்றும் பணம் அனுப்புதல் குறைதல் போன்ற காரணிகள் வறுமை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ள போதிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு ஒப்பந்தத்தின் படி செயற்படுவது அவசியமானது என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கையில் சுமார் 60 வீத குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுகின்றமை தொழிலாளர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டில் 52.3 வீதமாக காணப்பட்ட நகர்ப்புற தொழிலாளர் படை, 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 45.2 வீதமாக குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் 17 வீதமான குடும்பங்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்காக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.