கோணமாமலையில் மூன்று கோவில்கள்!
கோணமாமலையில் 1622-1624 போர்த்துக்கேயர் அழித்த போது உண்மையில் மூன்று கோவில்கள் இருந்தனவா ? செவிவழியாக சொல்ப்படும் இக்கூற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா ?
இவற்றுக்கு பதிலாக எங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான ஆவணம்தான் 1639 இல் வரையப்பட்ட, Descripçam da fortaleza de sofala, e das mais da india com huma rellaçam das religiões todas q[ue] há no mesmo estado [manuscrito] எனப்படும் போர்த்துகேயர்களின் அனைத்து கோட்டைகளின் வரைபடங்கள் அடங்கிய ஓவிய வரைபடத்தொகுப்பு.
அதில் தெளிவாக மூன்று கோவில்களை அடையாளப்படுத்தி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதன் பின் இவரைபடத்தை இன்னும் தெளிவுபடுத்தி போர்த்துக்கேய வரலாற்றாளர் Boccarro Antonio உம் வரைந்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
எனில் அம் மூன்றுகோவில்களும் என்ன என்னவாக இருந்திருக்கும் என கேள்வி எழலாம், அதில் ஒன்று யாவரும் அறிந்த 3 ஆம் நூற்றாண்டு வரைக்கும் தெளிவான வரலாற்று சான்றுகளை உடைய சிவாலயம். அதை தவிர மீதம் இருந்த இரண்டு கோவில்களும் எதுவென தேடுகையில் அதற்கான ஆதாரங்களாக கிடைப்பது சில கல்வெட்டுக்கள்,
கோணேசர் கோவில் சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும் அங்குள்ள மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட்து என சொல்லபடும் கிட்டத்தட்ட ஒரு 5.5 அடி உயரமுள்ள மஹா விஷ்ணு சிலை, தலபுராணமான தெட்சண கயிலாய புராணம் மஹா விஷ்ணு மச்ச அவதாரம் முடித்து இத்தலத்தில் உள்ள ஈசனை பூசை செய்து போனார் என்றும் அதனால் இத்தலத்திற்கு மச்சகேஸ்வரம் எனவும் பெயருள்ளது என்கிறது, அப்பெயரை உறுதி செய்வனவாக, இரு கல்வெட்டுகள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டன ஒன்று, திருகோணமலை மின்சார வீதியில் இருக்கும் வெள்ளை வில்வபத்திர கோணேசர் எனபதும் சிவன் ஆலயத்தில் உள்ள „ரான உடையார் ஸ்ரீ சோழ இல(ங்கேஸ்) வரதேவற்கு யான் எ(ட்டாவது)..“ என தொடங்கும் கல்வெட்டில் „சோழ வளநாட்(டு) ….த் திருக்கோ(ண) மலை ஸ்ரீ மத்ஸ்ய (கஸ்வ) வரமுடையார் மூலஸ்தானமு(ம்)“ எனும் இடத்தில் மச்சகேஸ்வரமுடையாரின் மூலஸ்தானம் திருப்பணி செய்தமைக்கான கல்வெட்டாகும். இது தவிர நிலாவெளி தான கல்வெட்டு எனப்படும், „ஸ் (வஸ்தி ஸ்ரீ)…சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோணமலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு..“ என பொறிக்கப்படட கல்வெட்டும் கோணேச்சரமுடையார், மச்சகேஸ்வரமுடையார் என அக்காலத்தில் அழைக்கப்பட்டார் என்றும், தெட்சண கயிலாய புராணம் கூறும் கதையின் பெயர்காரணமும் தெளிவாக புலப்படும், எனவே அச்சிலையும் அவ் விஷ்ணு கோவிலுடையது எனக்கொள்ளலாம் எனில் மற்ற ஒருகோவில் மஹாவிஷ்ணுவுடையாதாக இருந்திருக்கலாம் என இதன்மூலம் எடுகோளிடலாம்.
இன்னுமொரு ஆலயம், அம்மையுடையதாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது, சாக்தத்தின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக கூறப்படும் சங்கரி தேவி பீடம் திருகோணமலை என புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை வரலாற்று ஆதரப்படுத்தும் விதமாக இருக்கும் Dr.ஜீவராஜ் அவர்களும், வரலாற்றுத்துறை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் அவர்களும் கண்டுபிடித்த, திருகோணமலை நகரில் இருந்து சுமார் 50km தூரத்தில் இருக்கும் கோமரன் கடவல எனும் இடத்தில் இருக்கும் குலோத்துங்க சோழக் காலிங்கராயன் கல்வெட்டு என சொல்லப்படும் கல்வெட்டாகும், இதுவும் ஒரு தான கல்வெட்டாகும் ஆனால இதை வழங்கியவரும் வழங்கப்பட்ட விடயமும் ஈழ தமிழ் வரலாற்றுக்கு மிக முக்கியமான சில விடயங்களை கூறுவனவாக உள்ளன, அதில் ஒன்று, „கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம் பண்ணுவித்தது.“ (இவர்தான் கலிங்க மாகோன் என பேரா.இந்திரபாலா அடையாளம் காணுகிறார்.) மற்றயது „ஆதிக்ஷேத்ரமாய் ஸ்வயம்புஸ்வயம்புவுமாந திருக்கோ[ணமாமலை]யுடைய நயனாரின்“ தலத்தில், „திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்தது“ (தேவி சிறப்பாக எழுந்தருளி இருக்கும் இடம்), அக்கோயிலை உடைய நாச்சியாருக்கு இந்த நிலத்தை தானமாக வழங்கிய கல்வெட்டு சாசனம்தான் அது. இக்கல்வெட்டு மூலமாக, கோணமாமலையில் அம்மைக்கும் ஒரு கோவில் இருந்தது தெளிவாகிறது.
எனவே செவி வழியான இச்செய்திகள், சில கல்வெட்டுகள் மூலமாகவும், போர்த்துக்கேயர் வரைபடம் மூலமாகவும் ஆதாரபூர்வமாகிறது. எனினும் இக்கோவில்களின் விக்கிரகங்களுக்கு, இதர பொருட்களுக்கும் என்ன ஆனது என இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.