யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு மீனவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் காலை முதல் நூற்றுக் கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
பின்னர் மீனவர்கள் ஒன்றிணைந்து இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சில மணி நேர போராட்டத்தின் பின்னர் ஒரு சில மீனவர்கள் மாத்திரம் இந்திய துணைத் தூதரகத்துக்குள் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டு கலந்துரையாடியதை அடுத்து மீனவர்கள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடி உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
கடற்றொழில் அமைச்சரும், இலங்கை கடற்படையும் விடும் தவறுகளாலேயே இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் வருவதாக இந்திய துணைத் தூதரக அதிகாரி கூறியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.