இந்திய எதிர்ப்பு வருத்தம் முற்றுகிறது!
இந்திய அரசிற்கெதிராக மனோநிலை தெற்கு வடக்கு பாகுபாடின்றி இலங்கையில் உச்சமடைந்துள்ளது.
இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (19) காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற மீனவர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களை காவல்துறையினர்; அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.
அதனையடுத்து அருகாகவுள்ள யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொழும்பு புறக்கோட்டையில் இந்திய காலனித்துவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த, தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்கள்; இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட எண்ணற்ற குறைகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
இதனிடையே இந்திய காலனித்துவத்துக்கு எதிராக” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை காவல்துறை விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சரத்துக்களால் தணிக்கை செய்ய முடியாது என பிரதான நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.