ரஷ்யாவின் ரோந்துக் கப்பல் மூழ்கடிப்பு
ரஷ்யாவின் மற்றொரு ரோந்துப் போர்க்கப்பலை உக்ரைனிய ஆளில்லா படகு மோதித் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டது.
கருங்கடலை அசோவ் கடலுடன் இணைக்கும் கெர்ச் ஜலசந்திக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட செர்ஜி கோடோவ் ரோந்துக் கப்பலை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 7 ரஷ்யக் கடைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்தனர். மேலும் 52 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் எனவும் கூறப்பட்டது. எனினும் இத்தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட முடியாதுள்ளது.
இதில் கப்பலின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து, ஒரு சில நிமிடங்களில் முழு கப்பலும் கடலில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் ஒரு உலங்கு வானூர்தியும் இருந்திருக்கலாம் என்று உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
மகுரா V5 எனும் ட்ரோன் படகு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. மணிக்கு 78 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த படகில் 200 கிலோ வரை வெடி பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
தற்போது அழிக்கப்பட்ட’ப்ராஜெக்ட் 22160′ எனும் கப்பல், ரூ.538 கோடி மதிப்புள்ளதாகும். இது ரோந்துக்கப்பல் என்று பரவலாக அறியப்பட்டாலும், கருங்கடல் பகுதியில் இக்கப்பலை மிஞ்ச ஆள் கிடையாது. அந்த அளவுக்கு தன் உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும். மொத்தமாக இதுபோன்று 4 கப்பல்கள்தான் ரஷ்யாவிடம் இருக்கின்றன. ஏற்கெனவே 1 கப்பல் அழிந்துவிட்டது. தற்போது இது இரண்டாவது கப்பலும் அழிக்கப்பட்டிருக்கிறது.