குருந்தூர்மலை விவகாரத்தில் கைதானவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
குருந்தூர் மலை தொடர்பான வழக்கொன்று இன்று வியாழக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டது.
B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
‚நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும்‘, ‚சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது‘, ‚குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும்‘ என வலியுறுத்தி தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 செப்டெம்பர் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைக்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதையடுத்து, பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கே இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் அடுத்த வழக்கு தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.