November 21, 2024

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! பழ.நெடுமாறன்

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல்!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்று பின்னர், உச்சநீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாக்கப்பட்டு 31 ஆண்டு காலமாக இருண்ட சிறையில் வாடிய சாந்தன், அதே உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும்கூட சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சாந்தன் உயிர் துறந்த செய்தி அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உச்சநீதிமன்ற ஆணையிட்டபடி உடனே விடுதலை செய்திருந்தால், அவர் தமிழீழம் சென்று தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பார். அவர்களின் அன்பான பராமரிப்பில் உயிர்ப் பிழைத்திருக்கக் கூடும்.

சாந்தனுக்கு நேர்ந்த கதி மற்ற மூவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது. எனவே, சிறப்பு முகாமில் இருக்கக் கூடிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் சொல்லொண்ணாத வேதனைகளுக்கு ஆளாகி இறுதியில் மறைந்து போன சாந்தன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன். 

அன்புள்ள,
பழ. நெடுமாறன்
தலைவர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert