யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தமது ஒப்புதல் இன்றி 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள்.
ஜனாதிபதிக்கு உங்களது தெரிவுகளை அனுப்புங்கள் அல்லது எம்மிடம் தாருங்கள். ஒரு வாரத்திற்குள் திட்டங்களை வழங்கினால் உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்
அதேவேளை, ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடர்பில், கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென அமைச்சர் ஜீவன் தொண்டமானும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஆனாலும் குடிநீர் பிரச்சினை, விவசாயத்துக்கான நீர் தொடர்பில் தீர்க்கமான தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,கமக்கார அமைப்புகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கொழும்பில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரிய முடிவினை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்திய இழுவை மடி படகுகளை நிறுத்துவது தொடர்பில், விவாதிக்கப்பட்டது. இவ்விடயமே எமது கடற்றொழிலாளர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருக்கிறது.
எமது பிரதேச வளங்களை அழிக்கின்ற கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக கடற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.