November 21, 2024

தலைவர் பிரபாகரன் பற்றி பரவிய வதந்திகள்

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பல முனைகளிலும் நகர ஆரம்பித்திருந்த இந்தியப் படையினர், மனித வேட்டைகளை நடாத்தியபடியே தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள்.

படுகொலைகள், கொள்ளைகள், வீடுடைப்புக்கள், பாலியல் வல்லுறவுகள் என்று தமிழ் மக்கள் மீது அட்டூழியங்களைப் புரிந்தபடியே இந்தியப் படையினரின் அந்த நகர்வுகள் இருந்தன. மக்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

எங்கு செல்வது என்றும் புரியவில்லை. சிறிலங்காப் படைகளின் தாக்குதல்கள் உக்கிரமடையும் கட்டங்களில் இந்தியா தலையிட்டு எம்மைக் காப்பாற்றும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்தியப் படையினர் நகர்வு

ஆனால் அந்த இந்தியாவே தம்மீது இப்படியான ஒரு நெருக்குதலை ஏற்படுத்தும்போது என்ன செய்வது என்று எதுவுமே புரியாமல் மக்கள் தடுமாற்றம் அடைந்தார்கள். மக்கள் குடியிருப்புக்களில் நிமிடத்திற்கு ஒரு செல் வந்து விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட இடங்களெல்லாமே பிணக் குவியல்களாகவே காட்சி தந்தன.

இந்தியப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளும் மிகவும் உக்கிரமாகவே இருந்ததால், மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள்.

india srilanka

அவர்களால் எந்தப் பக்கமும் நகர முடியவில்லை. போதாததற்கு இந்தியப் படையினரின் விமானங்கள் பறந்து பறந்து மக்களை நோக்கி தாக்குதல்களை நடாத்தியபடி திரிந்தன.

மீண்டும் யாழ்ப்பாணம் ‘ஷெல் வந்த நாடாக மாறியது. பழையபடி யாழ் மக்களை அகதி வாழ்க்கை அழைத்தது. அகதி முகாம்களில் அவதி மக்கள் தமது வீடுகளில் தொடர்ந்து தங்கி இருப்பது தமது உயிருக்கும், மானத்திற்கும் ஆபத்து என்று உணர்ந்து, படிப்படியாக பொது இடங்களை நோக்கி அடைக்கலம் தேடி இடம்பெயர ஆரம்பித்தார்கள்.

யாழ் குடாவெங்கும் திடீர் அகதி முகாம்கள் பல முளைக்க ஆரம்பித்தன. கோவில்கள், பாடசாலைகள் அகதி முகாம்களாயின.

மக்கள் கைகளில் அகப்பட்ட முக்கியமான பொருட்களையும், மாற்றுத் துணிகளையும் மட்டும் தம்முடன் எடுத்துக்கொண்டு அகதி முகாம்களை நோக்கி அவசரஅவசரமாகப் படையெடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்பாணத்தில் வசிக்கும் அனேகமான குடும்பங்களிடம் குறைந்தது 50 பவுன்களுக்கு அதிகமான எடையுள்ள தங்கநகைகள் இருப்பது வழக்கம்.

அவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தம்மிடமுள்ள நகைகளில் கைவைப்பது அரிது. இன்னும் அதிகமாக நகைகள் செய்து தம்முடன் வைத்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்களே தவிர இலகுவில் தமது நகைகளை விற்றுவிடமாட்டார்கள்.

யாழ் மக்களுக்கே உரித்தான சாதிப்பிரச்சினை

யாழ் நகரை நோக்கிப் படையெடுத்திருந்த இந்தியப்படை ஜவான்களும் இந்த நகைகளை குறிவைத்து தமது வேட்டைகளை ஆரம்பித்திருந்ததால், மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்த போது நகைகளை எங்காவது மறைத்துவைத்துவிட்டே வெளியேறவேண்டி இருந்தது. பெண்கள் தமது தாலிகளைக் கூட கழட்டி ஒளித்துவைக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

நகைகளையும், பண நோட்டுக்களையும் பத்திரமாக நிலத்தின் அடியில் புதைத்துவிட்டு, புதைத்த இடத்தின் மீது அடையாளத்திற்கு எதையாவது நட்டு வைத்துவிட்டு கனத்த மனங்களுடன் தமது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

tamil diasporas

இளைஞர்கள் தங்களது பாடசாலை நற்சான்றுப் பத்திரங்கள், பரீட்சைப் பெறுபேறு ஆவணங்கள், கடவுச் சீட்டுக்கள் என்பனவற்றை கவனமாக பைகளில் போட்டு தம்முடன் எடுத்துச் சென்றார்கள்.

ஒருவேளை உயிர் தப்பினால் எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு அவைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். யாழ் குடாவின் கலாச்சார மையம் என்று கூறப்படுகின்ற நல்லூர் கந்தசாமி கோயில் யாழ்பாண நகர மக்களின் பிரதான அகதி முகாமாக உருவெடுத்திருந்து.

ஆயிரக்கணக்கில் அங்கு வந்து தஞ்மடைய ஆரம்பித்த மக்களின் நெருக்கடி தாங்காது கோயிலே திண்டாடியது.

சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நல்லூர் கந்தசாமி கோயிலில் அப்பொழுது தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனை நெருக்கடியிலும் கோயில்களில் திரண்டிருந்த மக்களிடையே, யாழ் மக்களுக்கே உரித்தான சாதிப்பிரச்சினைகளும் கிளம்ப ஆரம்பித்தன.

உயர்ந்த சாதியினருக்கு கோயிலில் உயர்ந்த இடத்தில் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கு எழுந்திருந்தன. அங்கிருந்த மற்றவர்களுக்கு இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

இவற்றினால் இடைக்கிடையே வாய்த்தர்க்கமும், கைகலப்பும் கூட ஏற்பட ஆரம்பித்தன. சன நெருக்கடிக்கு மத்தியல் சிலர் தம்முடன் தமது வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற உபகரணங்களையும் அகதி முகாமிற்குள் கொண்டுவர முற்பட்டபோதும் பிரச்சினைகள் எழுந்தன.

சமையலும் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருந்தன. சிலர் கைகளில் அகப்பட்ட சில அசைவ உணவு வகைகளை கோயில் வளாகத்திற்குள் சமைக்க முற்பட்ட போது பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்கள் தமது கடன்களைக் கழிப்பதிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. பாடசாலைகளின் நிலமையும் இப்படித்தான் இருந்தன.

நான் கல்வி கற்ற பாடசாலை, அதனால் எனக்கு முதலிடம் வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஆசிரியர் குடும்பங்களுக்கு தனி இடம் என்று ஒரு பிரிவினரும், அதிபரின் உறவினருக்கு என்று ஒரு தனி மண்டபம் என்று வேறு சிலரும் கூறிச் செயற்பட்டதால் பல சிக்கல்கள் எழுந்தன.

இதைவிட இந்தியன் கைகளால் சாவது மேல் என்று கூறி பலர் பாடசாலைகள், கோவில்களை விட்டு வெளியேறி தமது வீடுகளுக்கு திரும்பவும் சென்ற சந்தர்ப்பங்களும் இருந்தன.

தாக்குதல்களுக்கு உள்ளான அகதி முகாம்கள்

இத்தனை கஷ்டங்களுடன் மக்கள் அடைக்கலமாகி இருந்த அகதி முகாம்களையும் கூட இந்தியப் படையினர் விட்டுவைக்கவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.

20.10.1987 அன்று சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நிறம்பிவழிந்த அகதிகள் மத்தியில் இந்தியப் படையினர் அடித்த ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. பாடசாலை அதிபரும், அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த இடத்தில்தான் அந்த ஷெல் விருந்து வெடித்தது.

prabakaran

பாடசாலை அதிபர், அவரது மகனான ஒரு ஆசிரியர் உட்பட ஆறு பேர் பலியானார்கள். இருபதிற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

அகதிகள் நிரம்பி வழிந்த சென் ஜோன்ஸ் கல்லூரியை நோக்கியும் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அகதி முகாமாக மாறியிருந்த யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் இந்தியப் படையினர் ஏவிய ஷெல் வந்து விழுந்ததில், அங்கு தஞ்சமடைந்திருந்த ஆறுபேர் கொல்லப்பட்டார்கள்.

நாவலர் மண்டப அகதி முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயமடைந்தார்கள். சுண்டுக்குழி அகதிமுகாமை நோக்கிச் சென்றுகொடிருந்த அகதிகள் மீதும் இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்தினார்கள். பலர் கொல்லப்பட்டார்கள்.

தமிழ் மக்கள் அபயம் அடைந்திருந்த அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் மனித வேட்டை நடாத்திய சந்தர்ப்பங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரி அகதி முகாமில் இந்தியப் படையினர் மேந்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 24 அகதிகள் துடிதுடித்து இறந்தார்கள்.

(25.10.1987 அன்று நடைபெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்).

பரவிய வதந்தி

இதேவேளை, நல்லூர் கந்தசாமி கோயிலில் தஞ்சமடைந்திருந்த மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ஒரு வதந்தி யாழ் குடாவெங்கும் பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்தது.

ltte leader

படிப்படியாக அந்த வதந்தி இந்தியப் படையினரிடையேயும் பரவ ஆரம்பித்திருந்தது.

‘புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லூர் கந்தசாமி கோயிலினுள் மக்கள் மத்தியில் மறைந்து தங்கியிருக்கின்றார்– என்பதே அந்த வதந்தி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert