தமிழ் மக்கள் கலாச்சாரம் தலைவர் கட்டமைத்தது!
யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட சினிமாக கலை நிகழ்வுகளில் செய்யப்பட்ட செலவுகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த கோரிக்கைககள் விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளிற்கென அழைக்கப்பட்ட கலைஞர்களிற்கு கோடிகளில் ஏன் தாரை வார்த்து பணம் செலவிடப்பட்டதென கேள்வி எழுப்பியுள்ளார் சிவில் செயற்பாட்டாளர் தம்பிராசா.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்களது கட்டுப்பாடு ஒழுக்கத்தை தலைவரே கட்டமைத்து தோற்றுவித்திருந்தார்.அதனை சிதைக்க இளைஞர்களை போதைபொருள் அடிமைகளாக்கி களியாட்டம் மூலம் குழப்பங்களை தோற்றுவித்துள்ளதாகவும் தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது.
அதேவேளை, வடக்கில், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோசங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்,காவல்துறையினர், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டுமெனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.