Dezember 3, 2024

தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை – செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் கனடா!

தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது.

 புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை – செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல – அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள். 

 இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல – இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது – தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு.

 ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் – செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert