Dezember 3, 2024

சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி ஆகவே வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

“அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன. ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை  ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம். ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.”

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert