ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரை விடுவிக்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சிறீதரனின் கடிதம்
சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி, அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தனின் தாயாரின் கோரிக்கை
கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.