யாழ்.பல்கலையில் தமிழ்க் கிறித்தவ கலை உலகங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறையும் தென்னிந்தியா – தமிழ்நாடு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து ‘தமிழ்க் கிறித்தவக் கலை உலகங்கள்’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கினை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்ப்பண்பாட்டிற்கு கிறிஸ்தவக் கலைகளின் பங்களிப்பும் கிறிஸ்தவத்திற்கு தமிழ் கலைவடிவங்களின் பங்களிப்பும் தமிழ்ப்பண்பாட்டின் பன்மைப் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளவதில் முக்கியமானவை.
அந்தவகையில், நுண்கலைத்துறையின் ஐந்தாவது கருத்தரங்கானது இதுவரை அதிகம் பேசப்படாத இவ்விடயத்தில் கவனமெடுக்கிறது.
காலனிய காலகட்டத்திற்கு முன்பிருந்தே பாக்கு நீரிணையின் இருபக்கமும் நடைபெற்று வந்த கலைச் செயற்பாடு சார்ந்த ஊடாட்டங்கள் கிறித்தவத்தின் தாக்கத்தினால் புதிய பரிமாணங்களை அடைந்தன.
தென்னிந்தியா – இலங்கை ஆகிய இருபகுதிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் இப்பண்பாட்டுப் பரிமாற்றங்கள் – எடுத்துக்காட்டாக சிற்பம், ஓவியம், கட்டடம், இசை, நாடகம் போன்ற செயற்பாடுகள் – முறையான ஆய்வுக் கவனத்தைப் பெறவில்லை.
இப்பின்னணியில், பாக்கு நீரிணையின் இருபக்கமுமுள்ள தமிழ்ச் சமூகங்களில் கிறித்தவ சமயம் சார்ந்த ஊடாட்டங்களின் மூலம் கலைச் செயற்பாடுகளில் நிகழ்ந்த பரிமாற்றங்களைää பரிமாணங்களை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கம் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நிகழும் அங்குரார்ப்பண நிகழ்வில் அருட்தந்தை ஜெயசீலன் “தமிழ் கிறித்தவக் கலைகள்” என்ற தலைப்பிலும், மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளரும் கட்டடக்கலைஞருமான சாகர ஜெயசிங்க “வட இலங்கையின் 19ஆம் நூற்றாண்டுக் கட்டடக் கலையையும் கலையையும் ஆராய்தல்” என்ற தலைப்பிலும் திறப்புரைகளை வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கேராளவில் தமிழ்மொழியில் ஆற்றப்படும் கத்தோலிக்க ஆற்றுகை வடிவம் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்விற்கு முன்னராக, அதே தினம் மாலை 3.00 மணிக்கு “பண்பாட்டு ஒட்டு” என்ற தலைப்பிலமைந்த வட இலங்கைத் தேவாலயங்கள் பற்றிய ஓரு காட்சியும் நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் எட்டு அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்படவுள்ளன. கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சிகளிலும்; பிற அமர்வுகளிலும் அனைத்துக் கலை ஆர்வலர்களையும் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள். 30ஆம் மற்றும் 31ஆம் திகதி அமர்வுகளுக்கான முன்பதிவுகளை நுண்கலைத்துறையில் மேற்கோள்ளலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கலைப்பீடமும் இவ்வாண்டு தமது பொன்விழாவைக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.