முன்னணியினருக்கு மேலதிக விசாரணை!
மட்டக்களப்பு, வவுணதீவில் மாவீரர் நாளில் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான், சந்தேநபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) மற்றும் அவரது மகன் ஆகியோர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருக்குக் காலில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு நேற்றுமுன்தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, மாவட்ட அமைப்பாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவரது மகன் ஆஜராகி இருந்தார்.
கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், கைது செய்யப்பட்டவர்களுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளமை அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்த நீதிவான், அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டார்.