இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்பட நல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்படநல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பைவலியுறுத்துகிறது
தமிழ்ச் சமூகம் மற்றும் பரந்த இலங்கை மக்களுக்குள் ஒற்றுமையையும் உரையாடலையும் வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ள அமைப்பு என்ற வகையில், இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் (WTSL) அதன் உறுப்பினர்கள், தமிழ்ச் சமூகத் தலைவர்கள், மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்புடனும் ஆக்கபூர்வமான உரையாடல்களை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
சமீபத்தில் ‚சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்‘ மற்றும் ‚உலகத் தமிழர் பேரவை‘ (GTF) ஆகியன இணைந்து வெளியிட்ட ‚இமயமலைப் பிரகடனம்‘ தொடர்பான ஊடக அறிக்கைகள், பல தமிழ் அமைப்புகள் மற்றும் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளின் கரிசனையுள்ள பதிலுத்தாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. இப் புதிய கூட்டுச் செயற்பாடு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், வேறு சில தமிழ் புலம்பெயர் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை பாதித்துள்ளதாகவும் கருத்துக் கூறப்படுகிறது.
இவ்வேளையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல மூத்த பௌத்த மதகுருமார்களுடன் இணைந்து செயற்படுவதற்கு GTF மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில், உத்தேச ‚தேசிய உரையாடல்‘ எதிர்பார்க்கும் “இலங்கையின் அனைத்து மக்களினங்களுக்கும் பல்சமய புரிந்துணர்வு, ஒற்றுமை, சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம், செழிப்பு” ஆகியவை ஏற்படவேண்டுமாயின், தமிழ் அரசியற் சமுதாயம் மற்றும் பரந்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் வெளிப்படைத்தன்மை, ஆலோசிப்பு மற்றும் கருத்தொருமிப்பை உருவாக்குவதின் அவசியத்தை WTSL வலியுறுத்துகிறது.
அத்துடன், இதுவிடயத்தில் முன்னோக்கி நகர்வதற்கு தமிழ் மக்களின் குறைகளை நீக்க அரசாங்கம் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சிறிய சாதகமான முறையில் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தையும் WTSL வலியுறுத்த விரும்புகிறது. தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை மதித்து அதை ஒருங்கிணைக்கும் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சில உடனடி நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரகடனத்தின் இரு தரப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
இதனிடையே, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பொருளாதார, சமூக, வாழ்வாதாரம் மற்றும் இருத்தலியல் பிரச்சனைகள் மேலும் மோசமடைவதற்கு முன்னர் அவற்றைத் தணிக்கவல்ல இடைக்கால நடைமுறை நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு WTSL தொடர்ந்தும் தீவிரமாக குரலெழுப்பும். இதுவிடயத்தில் ‚இமாலயப் பிரகடனம்‘ தெளிவாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வழமைக்கு மாறாக சிந்தித்து, கள யதார்த்தங்களை கணக்கில் எடுத்து, புதிய முயற்சிகளுக்கு சந்தர்ப்பம் கொடுப்பது அனைவர்க்கும் நல்லதே. அந்தவகையில், ‚சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்‘ உட்பட நாட்டிலுள்ள அனைத்து முற்போக்குக் குழுக்களுடனும் தோழமை மற்றும் கூட்டணிகளைப் பேணி, நடக்கவிருக்கும் தேசிய உரையாடலில் தமிழ் மக்களும் பங்கேற்பது அனைத்து மக்களுக்கும் நல்ல பெறுபேறுகளை உருவாக்க முடியும் என நாம் நம்புகிறோம். சிங்களக் கிராமங்கள் தோறும் உள்ள பன்சாலைகளில் இவை பேசப்படும் பொழுது அவை நாளடைவில் அரசியல் கட்சிகள் மட்டத்தில் மாற்றங்களை ஊக்குவிக்கும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதே.
அதேவேளையில், ஏனைய சர்வதேச, உள்நாட்டுத் தமிழ் சமூக அமைப்புகளையும் அரசியல்வாதிகளையும் அணுகிப் பேசி, அவர்கள் மட்டில் நிலவும் சந்தேகங்களையும் தீர்த்துவைப்பது GTF அமைப்பினரின் தவிர்க்க முடியாத பொறுப்பும் ஆகும்.
அப்போதுதான் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்பி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்திற்கு வழிசெய்ய முடியும்.
ராஜ் சிவநாதன்
International Coordinator (WTSL)
Email: rajasivanathan@gmail.com,
ப