கொழும்பு காசு இனி வடக்கிற்கு வராது:ரணில்!
வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும் உள்ளன. வடக்கின் அபிவிருத்திக்கு மட்டுமன்றி முழு நாட்டின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியுமென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு போதுமான அதிகாரப்பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அந்த செயற்பாடுகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களே போதுமானது என நினைக்கின்றோம். கொழும்பில் இருந்து பணம் வரும் வரை காத்திருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமென அனைத்து மாகாணங்களினதும் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி கேட்டுக்கொணடுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரச பங்காளியான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று (04) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.