November 21, 2024

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுகிறது. 

தினமும் சராசரியாக 70 தொடக்கம் 100 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.

கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலே டெங்கு நோயின் பரம்பல் தீவிரமாக காணப்பட்டது.

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலே மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்துள்ளது. 

கடந்த வருடத்திலேயே யாழ் மாவட்டத்திலே 3986 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டனர். இந்த வருடத்தில் முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள்.

இதனால்  டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

சுகாதாரத் திணைக்களம், பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் பொலிசார் மற்றும் முப்படையுடன் இணைந்து  வீடுவீடாகச் சென்று டெங்கு கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் அதனை சூழவுள்ள வீடுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பரீட்சை மண்டபங்களாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலும் டெங்கு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு புகையூட்டல் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்  மாவட்டத்தில் டெங்கு இறப்புகள்  காலம் தாழ்த்தி வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்களே இறப்பினை சந்தித்துள்ளனர்.

எனவே எதிர்காலத்தில்  டெங்கு அறிகுறி காணப்படும் நோயாளர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலை நாடுவதன் மூலம் தங்களை டெங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் – என்றார்.-

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert