ஜனாதிபதி யாழ் வருகை – போராட்டத்திற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நாளை (04) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்திருந்த உத்தரவிற்கு அமைய, வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான தவத்திரு வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தார்.