November 21, 2024

கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்

யேமனின் தலைநகரான சனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹூதி போராளிகளால் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது இன்று திங்கட்கிழமையும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtube.com/watch?v=DKN9i6ldWWg%3Fsi%3DSfk9BRlVocmznN6_

குறிப்பாக கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் எம்.எஸ்.சி கிளாரா கப்பல் மற்றும் இரசாயணங்களை ஏற்றிச் செல்லும் சுவான் அட்லான்டிக் கப்பல் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

செங்கடல் வழியாகச் பயணிக்கும் கப்பல்கள் ஹூதி போராளிகள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் செங்கடல் வழியான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதாகப் பிரித்தானிய எண்ணெய் நிறுவனமான BP அறிவித்துள்ளது.

ஹூதிப் போராளிகள் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை குறிவைப்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக நிறுவனம் குற்றம் சாட்டியது.

தாக்குதல்கள் தொடர்வதால் பல சரக்கு நிறுவனங்கள் தங்கள் கப்பல் போக்குவரத்துக்களை இடை நிறுத்தி வைத்துள்ளன.

இதே நிலையப்பாட்டை ஏனைய பெரிய எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்தால் உலகில் எண்ணெய்யின் விலை உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 79.35 டொலராக அதிகரித்துள்ளது.

எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் செங்கடலும் ஒன்றாகும்.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு ஆசியா மற்றும் வளைகுடாவில் இருந்து கடல் வழியாக அனுப்பப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

அதில் 21.5 விழுக்காடு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் 13 விழுக்காட்டுக்கு அதிகமான கச்சா எண்ணெய்யும் அடங்கும்.

திங்களன்று, உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்று, இனி செங்கடல் வழியாக இஸ்ரேலியச் சரக்குகளை எடுத்துச் செல்லாது என்று கூறியது.

கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, எவர்கிரீன் லைன் உடனடியாக இஸ்ரேலிய சரக்குகளை ஏற்றிக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. மேலும் அதன் கொள்கலன் கப்பல்களுக்கு செங்கடல் வழியாக வழிசெலுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி போராளிகள் பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களை குறி வைக்கின்றனர். இது 20 மைல் அல்லது 32 கிலோ மீற்றர் அகலமுள்ள ஒரு கால்வாய் ஆகும். இதன் ஊடாகவே சுயஸ் கால்வாய் நோக்கி கப்பல்கள் செல்கின்றன.

கிளர்ச்சியாளர்கள் ஹமாஸுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர் மற்றும் அவர்கள் இஸ்ரேலுக்கு பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து வெளிநாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு எதிராக ட்ரோன்கள், ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

பாப் அல்-மண்டப் ஜலசந்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கப்பல்கள் இப்போது தென்னாப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட பாதையில் செல்ல வேண்டும். இவ்வாறு சென்றால் பயண நாட்கள் 10 நாட்களால் அதிகரிக்கிறன. இவ்வாறு நீண்ட தூரம் சுற்றிச் செல்வதற்குப்  பல மில்லியன் டொலர்கள் செலவாகும். இதனால் அனைத்து விதமான பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஹூதி போராளிகளுக்கு எதிராக போர் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  தாக்குதல்களை நடத்த யேமன் கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கக் கடற்படை தனது போர்க் கப்பல்களை நகர்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரித்தானிய, பிரஞ்சுப் போர்க் கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியக் கடற்படையும் இவர்களுடன் இணையவுள்ளது.

இதேநேரம் சவுதி, ஜோர்டான், ஹூதி போராளிகளை எதிர்க்கும் யேமனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்திடமும் ஹூதி போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவற்கு அவர்களின் நிலப்பகுதியைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதியைக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி ஜோர்டான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் நிலங்களைப் பயன்படுத்தி எங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அனுமதித்தால் சவுதி ஜோர்டான் மற்றும் யேமனின் முக்கிய பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவோம் என ஹூதி போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert