காசில்லை:கொக்கிளாய் புதைகுழிக்கும் விடுமுறை
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே முதலாம் கட்டத்தில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (28) வரையாக 39 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எவ்வளவு தூரம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஸ்கான் பரிசோதனை ஊடாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதிப்பக்கமாக ஏற்கனவே அகழ்வுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மேலதிகமாக ஒன்று தசம் ஏழு மீற்றர் வரை செல்வதாகவும் அகலமாக 3 மீற்றர் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் ஏற்கனவே அகழப்பட்ட குழியில் இருக்கின்ற உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் அகழ்வுப் பணியானது இன்றுடன் இரண்டாம் கட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ள உடற்பாகங்களை மீட்பதற்காக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.