நல்லூர் பின்வீதியில் நினைவுகூடம்!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமாகியுள்ளது.
இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகள் கொண்ட நல்லூர் நினைவாலயத்தில் தாய் மண்ணின் விடியலுக்காய் சிவபாதம் எல்லாளன், சிவபாதம் உருத்திரா, சிவபாதம் சுகாசினி ஆகிய தனது மூன்று பிள்ளைகளினை உவந்தளித்த தாய் சிவபாதம் இந்திரவதி அவர்கள் முதன்மைச்சுடரினை ஏற்றி வைக்க எமது வரலாற்றினையும் எமது வீரமறவர்களின் பாரம்பரிய நடுகல் வழிபாட்டு முறையினையும் அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் நோக்குடன் நினைவாலயத்தில் நிறுவப்பட்ட கல்லறைகளினை சிறார்கள் திறந்து வைத்து அஞ்சலித்தனர்.
இவ் நினைவாலயமானது புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்ற ஈழத்தமிழராகிய பார்த்தீபன் அவர்களி;ன் நிதி அனுசரணையுடன் நிறுவப்பட்டது.
அதே சமயம் நாளை மாலை 6 மணிக்கு முள்ளியவளை முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட நினைவாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.