November 23, 2024

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் அடக்குமுறை தொடர்வதை வெளிப்படுத்தி நிற்கிறது

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை  காட்டி நிற்பதாக பொத்துவில்  பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில்  பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில்  யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  இவ்வாறு தெரிவித்தார் .

 மேலும் தெரிவிக்கையில், 

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமாடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.

அந்த மேச்சல் நிலங்களில் வாழ்கின்ற வாயில்லாத ஜீவன்கள் துன்புறுத்தப்படுவதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கதையாக உள்ள நிலையில் அதற்காக நீதி கேட்டு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் சந்தி வெளிப்  பொலிசார் மூன்று வாகனங்களில் மாணவர்களின் பேருந்தை துரத்தி வழி மறித்து அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு வற்புறுத்தினர்.

மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்ததும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையம் வருமாறு பொலிசார் வற்புறுத்திய நிலையில் மாணவர்கள் அடையாள ஆட்டையை காண்பித்து விட்டோம் ஏன் வர வேண்டும் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவரையுமாக ஆறு பேரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்காக சென்ற மதத்தலைவரான அருட்பணி ஜெகதாசுக்கு பொலிசார் அனுமதி வழங்கவில்லை.

ஜனநாயக வழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தமை கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வருவதை வெளிக்காட்டி நிற்கிறது.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளக விசாரணை தேவையில்லை சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தி நிற்பதற்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert