ரணில் -பஸில் மோதல் உக்கிரம்!
ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மொட்டுக் கட்சி வழங்கியுள்ள பெயர்ப் பட்டியலின் அடிப்படையில், அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கவில்லை என்று பசில் ராஜபக்ச, ரணிலிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுக்களைக் கொடுத்துள்ளமைக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மொட்டுக் கட்சியின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி ரணில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளமைக்குக் கடந்த சில நாட்களாகத் தொடர் ஊடக சந்திப்புக்களை நடத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை எதிர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி ரணில், பசில் ராஜபக்சவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தாது ஜனாதிபதி அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளமைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டுவரும் பொதுஜன பெரமுனவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்கிரமசிங்க எவரது பின்னாலும் சென்று ஜனாதிபதிப் பதவியைப் பெறவில்லை என்றும், மாறாக அவரை அழைத்தே ஜனாதிபதிப் பதவியை பொதுஜன பெரமுன வழங்கியது என்றும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசாங்கத்துக்குள் முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் பட்ஜட் வாக்குகெடுப்பில் இது தாக்கத்தைச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.