மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்
காசாவில் அமைந்துள்ள அல்-அஹ்லி அரசு மருத்துமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்தியகிழக்கு நாடுகள் முழுவதும் கோபத்தையும் எதிர்ப்பு அலைகளையும் தூண்டியுள்ளது.
இககொடிய தாக்குதலைக் கண்டித்து எதிர்ப்பாளர்கள் குறைந்தது எட்டு நாடுகளில் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஈரான்
தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தூதரகங்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் நகரின் மையத்தில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தில் பல ஆயிரம் பேர் கூடினர்.
„பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் மரணம்“ என்று ஈரானிய தலைநகரில் உள்ள பிரெஞ்சு தூதரக வளாகத்தின் சுவர்களில் முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டனர்.
ஜோர்டான்
அம்மானில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் தெருக்களில் இவ்விரு நாடுகளுக்கம் எதிராப் போராடினர்.
லெபனான்
லெபனானிலும் போராட்டங்கள் வெடித்தன. அங்கு ஹெஸ்பொல்லா எல்லையில் இஸ்ரேலியப் படைகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
துனிசியா
கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் துனிஸில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெளியே கூடி, அமெரிக்காவைக் கண்டித்தனர். „பிரெஞ்சு மற்றும் அமெரிக்கர்கள் சியோனிஸ்டுகளின் கூட்டாளிகள்“ என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு நாடுகளின் தூதர்களையும் திரும்ப அழைக்கக் கோரினர். துனிசியப் பகுதியில் அமெரிக்க தூதரகம் இல்லை என்று கூச்சலிட்டனர்.
மேற்குக் கரை
மருத்துவமனை படுகொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் எதிர்ப்புகளைத் தூண்டியது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ரமல்லாவில் தெருக்களில் இறங்கினர். பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. ரமல்லாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பாலஸ்தீன எதிர்ப்பாளர் ஒருவர் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனை மீதான தாக்குதலைக் கண்டித்து லிபியா, ஏமன், மொராக்கோ ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.