November 24, 2024

பொன்னாவெளி:தூக்க கலக்கத்தில் அதிகாரிகள்!

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக் கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் அதற்கான எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் மன்னார் ஆயர் பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக் கல் அகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் போராட்டகாரர்களுடன் பேச வடக்கு ஆளுநரை கோரியுள்ளார்.

பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ சீமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணக்கல்லை அகழ்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு தற்போது சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி பகுதிகயை சேர்ந்த மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புகள் என்பவற்றிற்கும் என 28க்கும் மேற்பட்ட மகஜர்களை கையளித்துள்ளனர்.

இருந்த போதும் இதுவரை உரிய அதிகாரிகளிடமிருந்து எந்த விதமான பதில்களும் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அயல் கிராமங்களான கிராஞ்சி வலைப்பாடு வேரவில் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படும் எனவும் ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான ஒரு நிரந்தரமான தீர்வை தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert