November 24, 2024

நல்லூர் நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால் , அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள வாகனங்களை அனுமதித்தனர். 

அத்துடன் தாமும் பொலிஸ் வாகனத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் பகுதியில் சுற்றி திரிந்து நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்ததுடன் , மக்கள் நெரிசல் காணப்பட்ட இடத்தினால் வாகனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முயன்றனர். 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

கொட்டும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர். அதனால் நினைவிடத்தை அண்மித்த வீதியில் பெருமளவான மக்கள் காணப்பட்டமையால் , குறித்த வீதி ஊடாக வந்த வாகனங்களை மற்றைய மாற்று வீதியூடாக செல்ல அங்கிருந்த சிலர் வழி வகுத்தனர். 

அவ்வேளை அங்கு வந்த பொலிஸார் போக்குவரத்தை மக்கள் குவிந்துள்ள வீதி ஊடாகவே மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு பணித்ததுடன் , அங்கிருந்து போக்குவரத்து ஒழுங்குகளை செய்த இளைஞர்களையும் அவ்விடத்தில் இருந்து அச்சுறுத்தி அகற்றி இருந்தனர். 

இருந்த போதிலும் பெரும்பாலான சாரதிகள் தாங்களாகவே அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் வீதியை தவிர்த்து மற்றைய வீதி வழியாக தமது பயணத்தை மேற்கொண்டனர். 

அதேவேளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ய கோரி யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மறுநாள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை அடுத்து புதன்கிழமை விசேட ஹெலியில் யாழ்ப்பாணம் வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாதிகள் உள்ளிட்ட விசேட குழு நினைவேந்தலை தடை செய்ய கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தது.  அதனையும் மறுநாள் வியாழக்கிழமை யாழ்,நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்தது. 

அதன் போது , குற்றச்செயல்கள் வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றை கட்டுப்படுத்தவும் , அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸாரினால் முடியும் அவ்வாறு இருக்கையில் நடக்க போகும் நிகழ்வில் அப்படியான சம்பவம் நடைபெறும் என கூறி தடை கோருவதனை ஏற்க முடியாது என மன்று கூறி இருந்த நிலையில், உணர்வு பூர்வமான நிகழ்வில் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கும் முயற்சியில்,  இன்றைய தினம் பொலிஸார் நினைவேந்தலை குழப்பும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டு இருந்தனர் என அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் விசனம் தெரிவித்தனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert