யாழ். போதனாவில் கையை இழந்த மாணவி – மீண்டும் பள்ளிக்கு சென்றார்
மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச் சொண்டு கொடுத்து வரவேற்றதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோரும் மாணவியை வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த சாண்டிலியன் வைசாலி (வயது 8) எனும் மாணவி யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.
கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அங்கு சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாதமையால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.
கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு ஆகியன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீள தனது கற்றல் செயற்பாடுகளை தொடர பாடசாலைக்கு சென்ற சமயம் மாணவியை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.